தணிக்கை சபையை ஏற்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை
இராணுவ நடவடிக்கை மற்றும் ஆயுதக் கொள்வனவுகள் தொடர்பான செய்திகளுக்கு தடைவிதிக்க தணிக்கை சபையை ஏற்படுத்தும் எண்ணம் அரசுக்கு அறவே கிடையாதெனவும் அவசர காலச் சட்டமும், பயங்கரவாதத் தடைச் சட்டமும் இருக்கும் நிலையில் தணிக்கை சபை அவசியமே இல்லையெனவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
மிக் 27 ரக விமானக் கொள்வனவு உட்பட இராணுவ ஆயுதக் கொள்வனவுகள் இரகசியமானவையல்ல. அதில் மூடி மறைப்பதற்கு எதுவும் கிடையாது. அதேசமயம், இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் எந்தத் தணிக்கையும் அவசியப்படவில்லை.
அரசாங்கம் ஆயுதக் கொள்வனவுகள் தொடர்பான செய்திகளுக்குத் தடை விதிக்கும் விதத்தில் தணிக்கை சபையை அமைக்க முயற்சிப்பதாக ஒரு ஊடக அமைப்பு வெளியிட்டிருந்த அறிக்கையில் எந்தவித உண்மையும் கிடையாது. அப்படியான தணிக்கை சபையொன்று அமைக்கும் எண்ணம் அரசுக்கு கிடையவே கிடையாது.
அவசர காலச்சட்டமும், பயங்கரவாதத்தடுப்புச் சட்டமும் இருக்கும் நிலையில் தணிக்கை சபையொன்றுக்கு அவசியம் ஏற்படவில்லை. தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவசரகாலச்சட்டமும் பயங்கரவாதத் தடைச்சட்டமும் போதுமானதாகவே அரசு கருதுகின்றது.
இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
