கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

புதிய சிங்கள மாவட்டத்தை உருவாக்க முயற்சிப்பதாக கூறுவதில் உண்மை இல்லை

திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடையில் புதியதொரு சிங்கள மாவட்டமொன்றை உருவாக்கும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் எந்த உண்மையுமில்லையென தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சர் யாப்பா மேலும் தெரிவித்ததாவது;

வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் தமிழ் மாவட்டங்களான முல்லைத்தீவுக்கும் திருகோணமலைக்கும் இடையேயுள்ள வெலிஓயா, பதவியாபுர, திரியாய், புல்மோட்டை, கொக்கிளாய், தென்னைமரவாடி ஆகிய பிரதேசங்களை இணைத்து புதிய சிங்கள மாவட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையிலும் இறங்கவில்லை.

இக்குற்றச்சாட்டு தொடர்பில் எமது கண்டனத்தை தெரிவிப்பதுடன் நேற்று முன்தினம் புதன்கிழமை இக்குற்றச்சாட்டை

அமைச்சர் கருஜயசூரிய உடனடியாகவே மறுத்திருந்தார். அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறு தெரிவிக்கப்படுகின்றது.

தேசியப் பிரச்சினைக்கு தீர்வினை எட்டும் முகமாக அமைக்கப்பட்டுள்ள சர்வகட்சி பிரதி நிதிகள் குழுவிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி வெளியேறியுள்ளது. இதற்கு அக்குழுவில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் உடன்பாடு காண முடியாமல் இருக்கின்றதே காரணமென அக்கட்சி கூறியுள்ளது.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரான அமைச்சர் திஸ்ஸ விதாரண, கட்சிகளுக்குள் இணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இறுதிக் கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில் சர்வகட்சிக் குழு ஏகோபித்த சிபாரிசை முன்வைக்கும்போது ஐ.தே.க. என்ன கூறப் போகின்றது என்பதைப் பார்ப்போம்.

அரசாங்கம் சமாதான பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகளை காலத்துக்கு காலம் அழைத்தது. எனினும், அதனை அவர்கள் நிராகரித்தே வந்தனர்.

ஜெனீவாவில் இடம்பெற்ற இரண்டு பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைவதற்கு காரணம் விடுதலைப் புலிகளே. நாம் சமாதானத்தை வெளிக்காட்டுவதற்கான செயற்பாட்டில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றோம்.

அரச சமாதான செயலாளர் நாயகம் ரஜீவ விஜயசிங்க இந்தியாவில் பிரித்தானியா தொடர்பில் தெரிவித்தவற்றின் உண்மை நிலை குறித்து எனக்குத் தெரியாது. இதனை வெளிநாட்டு அமைச்சே கையாள்கின்றது. அமைச்சரும் பிரதியமைச்சரும் இவ்வார இறுதியில் நாடு திரும்பியதும் இது தொடர்பில் கவனம் செலுத்துவார்கள்.

தொப்பிகலை பிரதேசத்தை பௌத்த புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தப்போவதாகவும் தற்போது கைப்பற்றப்பட்ட சிலாவத்துறையில் புத்த வரலாறு உள்ளமையால் அதனையும் புனிதப் பிரதேசமாக ஆக்குவதற்கு முற்படுவதாகவும் தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையுமில்லை. இது அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பொய்ப்பிரசாரமாகும்.

செப்டம்பர் 7, 2007 - பதிந்தவர் tconews | Uncategorized | | No Comments Yet

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழியவும்